கிரிக்கெட்

2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: அக்டோபர் 4-ல் தொடக்கம்?

2027 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 21-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகன்னஸ்பர்க்,

2027 ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி நவம்பர் 21-ம் தேதி வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடருக்கான தற்காலிக தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை

2003-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா இணைந்து நடத்திய உலகக் கோப்பைக்கு பிறகு, மீண்டும் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

14 அணிகள் முறை மீண்டும் அமல்

கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2027 உலகக் கோப்பையில் மீண்டும் 14 அணிகள் பங்கேற்கும் பழைய வடிவம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. 14 அணிகளும் தலா 7 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும்.

54 போட்டிகள்

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 54 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பெரும்பாலான போட்டிகளை தென் ஆப்பிரிக்கா நடத்த உள்ளது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவிலும் முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

நவம்பர் 21-ல் இறுதிப்போட்டி?

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 21-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி பின்னர் வெளியிடும்.

SCROLL FOR NEXT