துபாய்,
ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, இப்ராகிம் ஜட்ரன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பாகிஸ்தான் வீரரான பாபர் அசாம் (709) 2 இடம் சறுக்கி 7-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இதனால் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி மீண்டும் டாப் -5 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அதேபோல் இலங்கை வீரர் அசலங்காவும் ஒரு இடம் ஏற்றம் கண்டு முறையே 6-வது இடத்தை பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 9-வது இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மஜராஜ் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தார். இதனால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய பவுலர்களில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 6-வது இடம் வகிக்கிறார்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மாற்றமில்லை. ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 8-வது இடத்தில் உள்ளார்.