சிட்னி,
டாஸ் ஜெயித்த இந்திய ஏ அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். டெஸ்ட் போட்டிக்கு தயார்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ள இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய சுப்மான் கில், பிரித்வி ஷா இருவரும் டக்-அவுட் ஆகி ஏமாற்றினர். ஹனுமா விஹாரி 15 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் ரஹானேவும் கைகோர்த்து சரிவை தடுத்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ஷாட்பிட்ச் பந்துகளை வீசிய போதிலும் அனுபவசாலிகளான இருவரும் திறம்பட சமாளித்தனர். புஜாரா 54 ரன்களில் (140 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே வீழ்ந்தார்.
கடைநிலை பேட்ஸ்மேன்களின் துணையுடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்த ரஹானே சதம் அடித்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 108 ரன்களுடன் (228 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய ஏ தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட்டின்சன் 3 விக்கெட்டுகளும், மைக்கேல் நேசர், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.