கிரிக்கெட்

22 ஓவர், 10 மெய்டன், 6 விக்கெட் - அறிமுக டெஸ்டிலேயே மிரட்டிய மானவ் சுதர்... 38 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்

மானவ் சுதர் தனது அறிமுக போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

முல்லான்பூர்,

முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - ஆப்கானிஸ்தான் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் தனது அறிமுக போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதரை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

6/33 - அறிமுக இன்னிங்ஸிலேயே அசத்தல்

23 வயதான மானவ் சுதர், 22 ஓவர்கள் வீசி 10 மெய்டன்களுடன் வெறும் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து சவாலாக விளங்கிய சுதர், தனது முதல் சர்வதேச டெஸ்டிலேயே மறக்க முடியாத முத்திரையை பதித்தார்.

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரரின் சாதனை

டெஸ்ட் அறிமுக போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 6 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை மானவ் சுதர் கடந்த 38 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1988-ம் ஆண்டு சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான நரேந்திர ஹிர்வானி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பிரத்யேக இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுதர்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் மானவ் சுதர் இணைந்துள்ளார். அவருக்கு முன்பு,நரேந்திர ஹிர்வானி, ரவிச்சந்திரன் அஸ்வின், திலீப் தோஷி, சையத் ஆபித் அலி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

10-வது இந்தியராக புதிய மைல்கல்

மேலும், அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய 10-வது இந்தியர் என்ற பெருமையையும் சுதர் பெற்றுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய 7-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.

இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்த அவர், மூன்றாம் நாளில் மீதமுள்ள விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது முதல் டெஸ்டிலேயே வரலாற்று சாதனையை பதிவு செய்தார்.

இந்திய அணிக்கு கிடைத்த புதிய நம்பிக்கை

சுதரின் அசாத்தியமான செயல்பாடு இந்திய அணிக்கு பெரிய முன்னிலையை ஏற்படுத்தியதோடு, எதிர்கால டெஸ்ட் அணிக்கான புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், தரமான இடதுகை சுழற்பந்து வீச்சாளராக மானவ் சுதர் உருவெடுத்து வருவது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.