கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - சாய் சுதர்சனுக்கு ஏமாற்றமா? இந்திய அணியில் அதிரடி மாற்றம்

1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வருகிறது.

மும்பை,

ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வருகை தரும்நிலையில், டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபாரமான பார்மில் இருக்கும் தேவ்தத் படிக்கல் 3-வது வரிசையில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இதனால் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு இந்தத் தொடரில் இடம் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை, வரவிருக்கும் முக்கியமான தொடர்களைக் கருத்தில் கொண்டு நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஞ்சி டிராபியில் சிறப்பாகச் செயல்பட்ட ஆகிப் நபி இந்தத் தொடரின் மூலம் தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது.

முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஐபிஎல் தொடருக்குப் பிந்தைய உடற்தகுதியைப் பொறுத்து அணியில் இணைவார்கள். மேலும், அனுபவ வீரர் முகமது ஷமி மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரும் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். ஓடிஐ தொடர் ஜூன் 14-ம் தேதி தரம்சாலாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓடிஐ போட்டிகள் ஜூன் 17 மற்றும் 20-ல் லக்னோ மற்றும் சென்னையிலும் நடைபெறும். அனைத்து ஓடிஐ போட்டிகளும் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். கோலி மற்றும் ரோகித் இந்தத் தொடரின் மூலம் அணிக்கு திரும்புகின்றனர்.

உத்தேச இந்திய டெஸ்ட் அணி பட்டியல்:- ஷுப்மன் கில், கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மது சிராஜ், ஆகிப் நபி, ஹர்ஷ் துபே, மொஹம்மது ஷமி மற்றும் அன்ஷுல் காம்போஜ்.