சென்னை,
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. மேலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியன் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இதுவே முதல் முறை ஆகும்.
இதற்கிடையில், ஒரு சுவாரஸ்யமான விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மூன்று டி20 உலகக்கோப்பைகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதியுள்ளன.
2022 - அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவை தோற்கடித்து, பின்னர் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றது.
2024 - அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி, ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை கைப்பற்றியது.
2026 - மீண்டும் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, அதே தொடரில் உலக சாம்பியனாக மாறும் சம்பவம் இதுவரை நடந்துள்ளது. இந்த நிலையில், 2026-லும் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளதால் மீண்டும் உலக சாம்பியன் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து இரண்டு டி20 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணியாக வரலாறு படைக்கும்.