Image Courtesy: Twitter @BCCI  
கிரிக்கெட்

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: முதல் இடத்தை நெருங்கும் சூர்யகுமார் யாதவ்..!!

இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவை தவிர வேற எந்த இந்திய வீரரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

துபாய்,

ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த 2-வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம் நடந்த 3-வது டி20 போட்டியில் சோபிக்க தவறியதால் அவர் முதல் இடத்தை நூலிழையில் தவறவிட்டுள்ளார். இந்த தரவரிசையில் முகமது ரிஸ்வான் 854 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். ரிஸ்வான்- சூர்யகுமார் ஆகியோருக்கு இடையே 16 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. 3-வது இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (801 ரேட்டிங் புள்ளி) உள்ளார்.

இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவை தவிர வேற எந்த இந்திய வீரரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை. கே எல் ராகுல் 14-வது இடத்திலும், விராட் கோலி 15 வது இடத்திலும், ரோகித் சர்மா 16 வது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 8 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும், சதம் விளாசிய ரூசோவ் 23 இடங்கள் முன்னேறி 20 இடத்திலும், அதிரடி வீரர் டேவிட் மில்லர் 10 இடங்கள் முன்னேறி 29-வது இடத்திலும் உள்ளனர்.