கிரிக்கெட்

’இங்கிலாந்தை வீழ்த்த ‘கூடுதல் முயற்சி’ அவசியம் - கவுதம் கம்பீர்

டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்த “கூடுதல் முயற்சி” தேவை என தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 8’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட், ஜோஸ் பட்லர் சரியான பார்மில் இல்லாவிட்டாலும், கேப்டன் ஹரி புரூக், ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு வந்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணியை சந்திக்கும்.

இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்த “கூடுதல் முயற்சி” தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “இங்கிலாந்து உலகத் தரம் வாய்ந்த அணி. வான்கடே கடினமான மைதானம். நாட்டிற்கும் அணிக்கும் சிறப்பான ஒன்றை செய்யும் இன்னொரு வாய்ப்பு இது. இங்கிலாந்து போன்ற தரமான அணியை வீழ்த்த ‘கூடுதல் முயற்சி’ அவசியம்,” என்றார்.