ஆன்டிகுவா,
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக தடுமாறிப்போனார்கள்.
50 ஓவர்கள் முழுமையாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணி கடைசி 83 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ், கைல் ஹோப் தலா 35 ரன்கள் எடுத்ததே அந்த அணியில் அதிகபட்சமாகும். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 2 ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டிக்கு திரும்பிய முகமது ஷமிக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தவான், கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஒற்றை இழக்க ரன்களில் வெளியேறினர். அடுத்து ரகானேயுடன் ஜோடி சேர்ந்த தோனி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ரகானே 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்தவர்களும் ரன் எடுக்க தவறியதால் இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி 54 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 5 விக்கெட்கள் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இத்தொடரில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடைசி போட்டி வருகிற ஜூலை 6(வியாழன் கிழமை) நடைபெற உள்ளது.