துபாய்,
2021 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மற்றும் ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையின் இரண்டாம் பாதியை நடத்திய பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் மற்றும் பல ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு துபாய் கிரிக்கெட் கவுன்சில் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள கலீஜ் டைம்சிடம் பேசிய துபாய் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் அப்துல் ரஹ்மான் பலக்னாஸ் கூறும்போது, அண்டை நாடான ஆசிய ஜாம்பவான்களுக்கு எங்கள் நாடு சரியான நடுநிலை இடமாக இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இங்கு நடைபெறுவதே சிறந்த விஷயம். இத்தனை வருடங்களுக்கு பிறகு ஷார்ஜாவில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி நடத்தும்போது அது ஒரு போர் போல இருந்தது. ஆனால் அது ஒரு நல்ல போர். அது ஒரு விளையாட்டுப் போர் மற்றும் அது அருமையாக இருந்தது.
எனக்கு நினைவிருக்கிறது. பாலிவுட் நடிகர் ராஜ்கபூர் தனது குடும்பத்துடன் ஒருமுறை வந்திருந்தார். விருது வழங்கும் இரவின்போது, மைக்கை எடுத்து, இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ஷார்ஜாவில் நடந்திருப்பது எவ்வளவு அற்புதம். கிரிக்கெட் மக்களை ஒன்றிணைக்கிறது. கிரிக்கெட் நம்மை ஒன்று சேர்த்துள்ளது. நாம் இப்படியே இருப்போம் என கூறினார்.
எனவே இதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். வருடத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு இரண்டு முறை பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு வந்து விளையாடும்படி இந்தியாவை சமாதானப்படுத்தினால் அது அற்புதமாக இருக்கும்.
நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் ஒட்டுமொத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குறிப்பாக துபாய் எதையும் சிறப்பாக நடத்துகிறது. நிச்சயமாக, 20 ஓவர் உலக கோப்பை நல்ல அமைப்பிற்கான அறிகுறியாகும். இந்தியாவுக்கு மாற்றாக இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று நான் கூறுவேன்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை துபாயில் நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்காக பி.சி.சி.ஐ.யில் உள்ள எனது நண்பர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பேன். அவர்கள் பாகிஸ்தானுடன் விளையாட தயாராக இருந்தால், எங்கள் இடத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் இருதரப்பும் எந்த கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவில்லை. அவர்கள் ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே சந்தித்துள்ளனர் என கூறியுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.