ஆமதாபாத்,
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 176 ரன்னில் சுருட்டிய இந்திய அணி அந்த இலக்கை 22 ஓவர்கள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. சுழல் சூறாவளிகள் யுஸ்வேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் கூட்டாக 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். ஆனால் முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 ரன்னில் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும், மாற்று தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட்ட மயங்க் அகர்வாலுக்கு தனிமைப்படுத்துதல் நிறைவடையாததாலும், துணை கேப்டன் லோகேஷ் ராகுல் இல்லாததாலும் வேறு வழியின்றி முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காராக இறங்கினார். கிஷன் 28 ரன் எடுத்தார்.
சூர்யகுமார் பேட்டி
இப்போது லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்பியதுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மயங்க் அகர்வாலும் அணியுடன் இணைந்து விட்டார். இதனால் யாரை தொடக்க வீரராக ஆட வைப்பது என்ற தர்மசங்கடத்தில் அணி நிர்வாகம் உள்ளது. இஷான் கிஷனுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது ராகுல் இறங்குவாரா? என்பது போட்டிக்கு முன்பாகத் தான் தெரிய வரும்.
இதையொட்டி இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல் ஆட்டத்தில் ஏறக்குறைய எல்லாமே எங்களுக்கு சரியாக அமைந்தது. அதே போன்று இந்த ஆட்டத்திலும் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளோம். ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர்களில் யாருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. நான் இப்போது 3, 4, 5-வது வரிசைகளில் பேட் செய்கிறேன். அணி நிர்வாகம் எந்த வரிசையில் பேட் செய்ய சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன். எப்போதும் அச்சமின்றி விளையாட விரும்புகிறேன் என்றார்.
வெஸ்ட்இண்டீசின் 50 ஓவர் இலக்கு
வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய விரும்புவதாக கேப்டன் பொல்லார்ட் கூறியிருந்தார். ஆனால் முதல் ஆட்டத்தில் அந்த அணி 43.5 ஓவர்களில் அடங்கியது. கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் அந்த அணி ஆல்-அவுட் ஆகி இருக்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் காட்டும் வேகத்தை வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு நாள் போட்டியில் கோட்டை விட்டு விடுகிறது. இந்த முறை தவறுக்கு பரிகாரம் தேட எல்லா வகையிலும் முயற்சிப்பார்கள். ஆனாலும் உள்ளூர் சூழலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், அகேல் ஹூசைன், பாபியன் ஆலென், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.