லக்னோ,
வரும் 2022-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசனில் புதிதாக உருவாகியுள்ள லக்னோ அணிக்கு முன்னாள் இந்திய வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், 'மீண்டும் ஐபிஎல் களத்திற்குள் வந்திருப்பது மிகச்சிறப்பானது. என்னை லக்னோ அணியின் ஆலோசகராக நியமித்ததற்கு கோயங்கா அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெற்றி பெற வேண்டுமென்ற நெருப்பு எனக்குள் இன்னும் அணையவில்லை. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் இல்லாமல் வழிகாட்டியாக செயல்பட உள்ளேன்' என்று கம்பீர் கூறியுள்ளார்.
40 வயதான கம்பீர் 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்றுகொடுத்துள்ளார் . அவர் 154 ஐபிஎல் போட்டிகளில் 4217 ரன்களை குவித்துள்ளார்.
தற்போது அவர் கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.