கிரிக்கெட்

ஐபிஎல் 2026 - புதிய விதிகளை வெளியிட்ட பிசிசிஐ

ஐபிஎல் 2026 தொடருக்கான புதிய விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐதராபாத்தை சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. சென்னை அணி முதல் போட்டியில் ராஜஸ்தானை கவுகாத்தியில் எதிர்கொள்கிறது.

இதற்கிடையில், ஐபிஎல் 2026 தொடருக்கான புதிய விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

*ஓர் அணி பயிற்சி செய்து முடித்த ஆடுகளத்திலோ அல்லது வலைப்பயிற்சி இடத்திலோ மற்றொரு அணி பயிற்சி செய்யக் கூடாது.

*ஒவ்வோர் அணியின் பயிற்சிக்கும் புதிய ஆடுகளங்கள் தயார் செய்யப்பட வேண்டும்.

*ஓர் அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துவிட்டாலும், அந்த இடத்தை அடுத்த அணி பயன்படுத்தக் கூடாது.

*ஒவ்வோர் அணியும் இந்த சீசனில் அதிகபட்சமாக 2 பயிற்சிப் போட்டிகளை மட்டுமே விளையாட முடியும். அதற்கும் பிசிசிஐயின் முன்அனுமதியை பெறுவது கட்டாயம்.

*முக்கிய ஆடுகளத்தில் இல்லாமல், மைதானத்தின் ஓரத்தில் உள்ள பக்கவாட்டு ஆடுகளங்களில் மட்டுமே பயிற்சிப் போட்டி நடத்தப்பட வேண்டும்.

*இரவு நேரத்தில் மின் விளக்குகளின் ஒளியில் பயிற்சிப் போட்டிகளை நடத்தினால், அது மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கக் கூடாது.

*பயிற்சி ஆட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும். 2 அணிகளும் ஒரே நேரத்தைக் கேட்டால், அணி மேலாளர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும்.