சென்னை,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் கேப்டன் ரஜத் படிதார், இந்திய டி20 அணியில் இடம் பெறுவது குறித்து கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய அவர், தற்போது தனது முழு கவனமும் ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுப்பதில்தான் இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து பேசிய படிதார், "இந்திய டி20 அணித் தேர்வை பற்றி நான் யோசிக்கவில்லை. என்னை இந்திய அணியின் கேப்டனாகவும் பார்க்கவில்லை. ஒவ்வொரு கேப்டனின் கனவும் கோப்பையை வெல்வதுதான். பட்டத்தை வெல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றார்.
இந்த சீசனில் 14 போட்டிகளில் 486 ரன்கள் குவித்துள்ள படிதார், ஆர்சிபியின் வெற்றி தனிப்பட்ட வீரர்களை மட்டும் சார்ந்ததல்ல என்று கூறினார்.
"முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டுமே அணி அதிகம் நம்பியிருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதனால் தான் இந்த சீசனில் எங்கள் அணியில் 8 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்" என்றார்.
மேலும் பேசிய அவர், "நாங்கள் வெறுமனே பிளே-ஆப் அல்லது இறுதிப்போட்டிக்கு வரவில்லை. கோப்பையை வெல்லும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளோம். அந்த மனநிலை ஒவ்வொரு வீரரிடமும் இருக்கிறது" என்றார்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகக் கூறிய படிதார், எதிரணியைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தங்களது சொந்த பலத்தை நம்பி விளையாடுவதே வெற்றிக்கான வழி என்று நம்பிக்கை தெரிவித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபிக்கு மேலும் ஒரு ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்பதே தற்போது தனது ஒரே இலக்கு என்றும் ரஜத் படிதார் உறுதியாக தெரிவித்துள்ளார்.