கிரிக்கெட்

ஐபிஎல்: ஒரே நாளில் 986 ரன்கள் - மிரட்டிய வீரர்களும், சிதறிய சாதனைகளும்

25-ம் தேதி நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ரன் மழை பொழிந்தது.

சென்னை,

ஐபிஎல் 2026 சீசனின் கடந்த 25-ம் தேதி கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியுள்ளது. அன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ரன் மழை பொழிந்ததில், பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்து போனார்கள். சிக்ஸர்கள், சதங்கள் என சாதனைகள் அனைத்தும் சுக்குநூறாக உடைக்கப்பட்டன.

நடந்த இந்த இரண்டு போட்டிகளில் (டெல்லி - பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் - ஐதராபாத்) நான்கு அணிகளும் இணைந்து மொத்தம் 986 ரன்கள் குவித்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை ரன்கள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன் 2024-இல் பதிவான 899 ரன்கள் என்ற சாதனையை இந்த நாள் தகர்த்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் மட்டும் மொத்தம் 59 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.

நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ், அதை வெற்றிகரமாக எட்டிப் பிடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச 'ரன் சேஸ்' செய்து உலக சாதனை படைத்தது. ஏற்கனவே 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் படைத்திருந்த சாதனையை அவர்களே மீண்டும் முறியடித்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல், பஞ்சாப் அணிக்கு எதிராக 152* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற அபார சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கிரிஸ் கெய்ல் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

மறுபுறம், 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 229 ரன்களை சேஸ் செய்தது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி மீண்டும் வியக்க வைத்தார். இதில் 12 சிக்ஸர்கள் அடங்கும். இது ஐபிஎல் தொடரில் அவர் அடித்த இரண்டாவது சதமாகும்.