கொல்கத்தா,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன், தற்போதுள்ள டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசியுள்ளார்.
தனது பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த நரைன், "அது ஆடுகளத்தைப் பொறுத்தது. மெதுவாக வீசும்போது பிட்ச்சில் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் 'பெஸ்ட்' என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு போட்டியும் ஒரு புதிய சவால்," என்று தெரிவித்தார்.
பவர்-பிளே ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அவர், " பவர்-பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்கப்படும் இந்த ஐபிஎல் சீசனில், அதைப்பற்றி அதிகமாக யோசிக்கக்கூடாது. முடிந்தவரை ரன்களைக் குறைத்து, மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களை வைத்து ஆட்டத்தைக் கட்டுப்படுத்துவதே எங்களின் திட்டம்," என்றார்.
மேலும், வெற்றி இலக்கை நோக்கி ஆடுவது குறித்துப் பேசிய அவர், "பவர்-பிளேவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் பிறகு ஆட்டத்தை நிதானமாக வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டும்," என்று கூறினார்.