டெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேவில் மிகக்குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லி படைத்தது. இறுதியில் டெல்லி 16.3 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மிரட்டலாக பந்து வீசிய பெங்களூரு வீரர்கள் ஜோஷ் ஹேசல்வுட் 3.3 ஓவரில் 12 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் 3 ஓவரில் 5 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தேல் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய பெத்தேல் 20(11) ரன்களில் அவுட்டானார். பின்னர் கோலியுடன் இணைந்த படிக்கல் டெல்லி பந்துவீச்சை பஞ்சர் செய்தார். ஜெமிசன் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசினார். இறுதியில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி பெங்களூரு அபார வெற்றி பெற்றது. கோலி 23(15) ரன்களுடனும் படிக்கல் 34(13) ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் ஜெமிசன் 1 விக்கெட் எடுத்தார்.