ஐதராபாத்:
ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சான்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளிடம் தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னை அணி, அடுத்தடுத்த போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தி தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக, காயம் காரணமாக இதுவரை விளையாடாத எம்.எஸ். தோனி, இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் ஒரு நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. எனினும், கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது அந்த அணிக்கு பெரும் நம்பிக்கையை தந்துள்ளது.
இதுவரை இவ்விரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை 15 முறையும் ஐதராபாத் 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தொடர் வெற்றிகளைத் தக்கவைக்க சென்னை அணியும், சொந்த மண்ணில் ஆதிக்கத்தைச் செலுத்த ஐதராபாத் அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.