அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 27வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சையீத் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ப்ரித்வீஷா(4 ரன்கள்) ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரஹானே(15 ரன்கள்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மும்பை பந்துவீச்சாளர் க்ருனால் பாண்டியா வீசிய 5வது ஓவரில் எல்.பி.டபில்யூ முறையில் ரஹானே அவுட் ஆனார். இதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார்.
இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அணியின் ரன் வேகம் சற்று உயர்ந்தது. அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயர் (33 பந்துகள், 42 ரன்கள்) க்ருனால் பாண்டியா வீசிய 15வது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்(13 ரன்கள்) 17வது ஓவரில் ரன் அவுட் ஆனார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரை சதத்தை கடந்த ஷிகர் தவான் 6 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் விளாசினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான்(69 ரன்கள்) மற்றும் அலெக்ஸ் கேரி(14 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடி வருகிறது.