கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. #IPL2018 #RCBVsMI

தினத்தந்தி

பெங்களூரு,

ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் குயின்டான் டி காக் மற்றும் மனன் வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் மூன்று ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 4-வது ஓவரை டுமினி வீசினார். இந்த ஓவரில் வோரா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 22 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு வோரா உடன் மெக்கல்லம் ஜோடி சேர்ந்தார். வோரா 45(31) ரன்கள் எடுத்த நிலையில் மார்கண்டே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 3-வது விக்கெட்டுக்கு மெக்கல்லம் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். மெக்கல்லம் - விராட் கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் மளமளவென உயர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.3 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருக்கும்போது மெக்கல்லம் 37(25) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. 18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் மந்தீப் சிங் (14), விராட் கோலி (32), வாஷிங்டன் சுந்தர் (1) ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் 150 ரன்னை எட்டுவதற்கே திணறியது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 1 விக்கெட்டுடன் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரில் கொலின் டி கிராண்ட்ஹோம் மூன்று சிக்சர்கள் விளாச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 24 ரன்கள் எடுத்தது. முடிவில் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

168 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷான் 0(1) ரன் ஏதும் எடுக்காமல் செளத்தி வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்து, சூர்யகுமார் யாதவ் 9(9) ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா 0(1) ரன் ஏதும் எடுக்காமலும் யாதவ் பந்து வீச்சில் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர். அடுத்து ஆட வந்த போல்லார்ட் 13(13) ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஏற்கனவே ரன் எடுக்க போராடிக் கொண்டிருந்த டுமினியுடன் சேர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். இருவரும் ரன்ரேட்டை உயர்த்த முயற்சி செய்யும் போது டுமினி 23(29) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார்.

அடுத்ததாக ஹர்திக் பாண்ட்யாவுடன், குர்ணால் பாண்ட்யா களமிறங்கினார். இருவரும் ரன்வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குர்ணால் பாண்ட்யா 23(19) ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா 50(42) ரன்களை கடக்கும் போது செளத்தி பந்தில் கேட்ச் ஆனார். கடைசியில், கட்டிங் 12(6) ரன்களும், மெக்கிளேனகன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 14 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் சார்பில் உமேஷ் யாதவ், செளத்தி மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு