கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சஹா சிறப்பான தொடக்கம் தர தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பவர்பிளே முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐதராபாத் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் 9 வது ஓவரில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாதியிலேயே வெளியேறினார்.

முதல் 10 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய ககிசோ ரபடா 3 விக்கெட்டுகளையும், நோர்ஜோ மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் பிரித்வி ஷா 11 (8) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ஷிகர் தவானுடன், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்த இந்த ஜோடியில் ஷிகர் தவான் 42 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷ்ரேயாஸ் அய்யருடன், கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 47 (41) ரன்களும், ரிஷப் பந்த் 35 (21) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 17.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு