அபுதாபி,
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் இன்றைய 11-வது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய ஐதராபாத், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஷா 2, தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (17), ரிஷாப் பண்ட் (32), ஹெத்மையர் (21), ஸ்டாய்னிஸ் (11) மற்றும் அக்சர் பட்டேல் (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.
நார்ஜே (3), ரபடா (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. ரஷீத் கான் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் போட்டி முடிவில் டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.