சென்னை,
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குவிண்டன் டி காக் களமிறங்கினர்.
டி காக் 2-வது ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தி சுழலில் 2 (6) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். ஆடுகளத் தன்மையை அறிந்த மோர்கன் பவர் பிளேவின் முதல் 5 ஓவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்தினார். ஹர்பஜன் வீசிய 3-வது ஓவரில் மட்டும் சூர்யகுமார் 3 பவுண்டரிகள் அடித்ததால் ரன் ரேட் சற்று உயர்ந்தது.
பேட் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் அடித்த சூர்யகுமார் 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்த கையோடு அடுத்த ஓவரிலேயே ஷகிப் அல் ஹசனிடம் 56 (36) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷன் 1 (3) ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதுவரை தாக்குப்பிடித்து விளையாடிய ரோஹித் சர்மா, கடைசி வரை விளையாடி பெரிய இன்னிங்சாக மாற்றத் தவறினார். கம்மின்ஸ் பந்தில் 43 (32) ரன்களுக்கு அவர் போல்டானார். அடுத்ததாக பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் ஹார்திக் பாண்டியா 15 (17) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரசல் வீசிய அடுத்த ஓவரில் கைரன் பொலார்ட் 5 (8) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்கோ ஜேன்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி.
இறுதியில் குருணால் பாண்டியாவால் கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் கிடைத்ததால் மும்பை அணி 150 ரன்களை எட்டியது. அவரும் கடைசி ஓவரின் 3-வது பந்தில் ரசலிடம் 15 (9) ரன்களுக்கு வீழ்ந்தார். ரசல் மேலும் அடுத்த பந்தில் ஜாஸ்பிரீத் பூம்ராவையும், கடைசி பந்தில் ராகுல் சஹாரையம் வீழ்த்தினார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரசல் 5 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசித், ஷகிப், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பில் நிதிஷ் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 33 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5(5) ரன்னிலும், கேப்டன் இயான் மோர்கன் 7(7) ரன்னிலும், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிதிஷ் ராணா 57(47) ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 9(9) ரன்னிலும் வெளியேறினர். அடுத்ததாக தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ரே ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ரசல் 9 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் (0) ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் 8 (11) ரன்களும், ஹர்பஜன் சிங் 2 (2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது