பெங்களூரு,
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி நாளை (மே 31) நடைபெறவுள்ள நிலையில், பெங்களூரு நகரில் பொது இடங்களில் போட்டியை திரையிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி முடிவை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பது, பேரணியாக திரள்வது உள்ளிட்ட செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுவெளியில் மது அருந்துதல், சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் சண்டையிடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இதனிடையே, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த மோதலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.