அகமதாபாத்,
ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெறும் அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. அதற்கு முக்கிய காரணம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் புள்ளிவிவரங்களே.
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 24 டி20 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், சேஸிங் செய்த அணிகள் வெறும் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளன.
இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மைதானத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருப்பது குஜராத் அணிக்கு சாதகமாக அமையலாம்.
மறுபுறம், ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி கடந்த சீசனில் வென்ற சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் களமிறங்குகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியை எட்டியுள்ளதால், ஆர்சிபியும் தன்னம்பிக்கையுடன் உள்ளது.
முதல் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த பின்னரும் போராடி மீண்டு வந்து இறுதிப்போட்டியை எட்டியுள்ள குஜராத் அணி கோப்பையை கைப்பற்றுமா? அல்லது ஆர்சிபி தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.