மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான் கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 41-வது லீக் ஆட் டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ரிக்கல்டன் 55 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹெட் 20 பந்திகளில் அரைசதம் கடந்தது அசத்தினார். தொடர்ந்து, அபிஷேக் சர்மாவும் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 45(24) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஹெட்டும் 76(30) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் கிளாசன் - நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இதில் நிதிஷ் நிதானமாக ஆட கிளாசன் அதிரடியில் இறங்கினார். 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த நிதிஷ் 21(17) ரன்களில் அவுட்டானார். பின்னர் கிளாசனுடம் ஜோடி சேர்ந்த சலில் மும்பை பந்துவீச்சை சிதறடித்தார்.
இறுதியில் 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. கிளாசன் 65(30)* மற்றும் சலில் 30(10)* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் ஏ.எம். கஸன்பர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.