சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்சின் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த டீ - ஷர்ட்டில் 'மோர்ஸ்' வகை எழுத்து குறியீடுகளான புள்ளி மற்றும் கட்டங்கள் இடம் பெற்று இருந்தன. அதன் அர்த்தம் 'கடைசியாக ஒரு முறை' என்பதாகும்.
இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெற போவதை மறைமுகமாக தெரிவித்துள்ளாரா? தோனி என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.