கவுகாத்தி,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. முன்னதாக, மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இருவரும் அதிரடியில் மிரட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. வைபவ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜுரேல் 2 ரன்களும், பராக் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், அரைசதம் கடந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ரிக்கல்டன் (8), ரோகித் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (6) திலக் வர்மா (14), ஹர்திக் பாண்ட்யா (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 46 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்த சரிவில் இருந்து மும்பை அணியால் மீள முடியவில்லை. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி மும்பை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இறுதியில் மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்தது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.