கிரிக்கெட்

டெஸ்ட்டை முந்திய ஐபிஎல் ரன்கள்... புதிய உச்சத்தை தொட்ட விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் எடுத்த 9,230 ரன்களை ஐபிஎல் ரன்கள் முந்தியுள்ளன.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான விராட் கோலி, தனது கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த மொத்த ரன்களை விட, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் ஒருவராக அவர் சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் 43 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், விராட் கோலியின் ஐபிஎல் ரன் எண்ணிக்கை 9,261-ஐ கடந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்த 9,230 ரன்களை ஐபிஎல் ரன்கள் முந்தியுள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கோலி, அதிக ரன்கள் குவித்த வீரராக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை 282 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9,261 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

மறுபுறம், ஜூன் 2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி, ஜனவரி 2025 வரை இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,230 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்துள்ள அவர், இந்தியாவின் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல், இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் கோலி திகழ்ந்தார். அவரது தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணிலும் பல வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது.

கடந்த ஆண்டு மே 12-ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கோலி, தற்போது முழு கவனத்தையும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் செலுத்தி வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,230 ரன்கள், ஐபிஎல்லில் 9,261 ரன்களுக்கு மேல் என இரு வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள விராட் கோலி, தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.