டெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது 2-வது லீக்கில் ஆப்பிரிக்க அணியான நமிபியாவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று சந்தித்தது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஜெராக்ட் எராஸ்மாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக இஷான் கிஷன் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார், நமீபியா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவும் சிக்ஸர்கள் பறக்க விட்டு வாண வேடிக்கை காட்டினார். அவர் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. நமீபியா அணியில் அதிகபட்சமாக எராஸ்மாஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா அணி களமிறங்கி விளையாடியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நமீபியா அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.