கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் பாகுபாடு: பாகிஸ்தான் மீது கம்பீர் கடும் தாக்கு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவிடம் சக வீரர்களே பாகுபாடு காட்டிய சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் வீரர் கம்பீர், பாகிஸ்தானின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது என்று சாடினார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 61 டெஸ்டுகளில் விளையாடி 261 விக்கெட் வீழ்த்தியவர், சுழற்பந்து வீச்சாளர் டானிஷ் கனேரியா. 18 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். அந்த அணியில் இடம் பிடித்து விளையாடிய இந்து மதத்தை சார்ந்த 2-வது வீரர் ஆவார். இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கியதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 39 வயதான கனேரியா பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய காலக்கட்டத்தில் சில வீரர்கள் அவரிடம் பாகுபாடு காட்டினர். அவர் இந்து என்பதால் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூட தயங்கினர். அவர் செய்த சாதனைகளுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அக்தர் கூறியது உண்மை தான் என்று ஒப்புக் கொண்ட கனேரியா, சில வீரர்கள் அவ்வாறு நடந்து கொண்டாலும் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது கவனம் பாகிஸ்தான் அணிக்காக வெற்றியை தேடித்தருவதில் தான் இருந்தது. மேலும் சிறந்த வீரர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். என்னை மதம் மாறச் சொல்லி யாரும் அழுத்தம் கொடுத்ததில்லை. எனக்கும் அத்தயை எண்ணம் வந்ததில்லை. நான் இந்துவாக இருப்பதிலும், பாகிஸ்தானியராக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

கனேரியாவிடம் சக வீரர்களே பாரபட்சத்துடன் நடந்து கொண்ட விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார்.

கம்பீர் கூறுகையில், இது தான் பாகிஸ்தானின் உண்மையான முகம். ஒரு விளையாட்டு வீரர் (இம்ரான்கான்) பிரதமராக இருந்த போதிலும் அந்த நாட்டில் இவ்வாறு நடக்கிறது. நமது அணியை பாருங்கள். முகமது அசாருதீன் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்திய அணியில் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டார். முகமது கைப், இர்பான் பதான், முனாப் பட்டேல் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள். இதில் பட்டேல் எனக்கு நெருக்கமான நண்பர். நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தோம். ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. அந்த அணிக்காக 61 டெஸ்டுகளில் ஆடிய கனேரியா நடத்தப்பட்ட விதம் வெட்ககேடானது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்