மும்பை,
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி முடிந்ததும், தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் 17 வீரர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அஜின்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஒய் சகால், புவனேஷ் குமார், பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர்.
சமீப காலமாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓரங்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல், இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லோகேஷ் ராகுல், அண்மையில் யோ யோ டெஸ்டில் தேர்வான சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.