கிரிக்கெட்

ஜேக்கம் பெத்தேல் சதம் வீண்..இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அபிஷேக் சர்மா ஏமாற்றமளித்தார். அவர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாம்சனும், இஷான் கிஷனும் இணைந்து அதிரடி காட்டினர்.

இஷான் கிஷன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, ஆட்டமிழந்தார். அவர் அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். சிவம் துபேவும் அதிரடியுடன் தனது பங்குக்கு 43 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இறுதியில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் வில் ஜேக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ரன்கள் , ஹாரி புரூக் 7 ரன்கள் , பட்லர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். மறுபுறம் வில் ஜேக்ஸ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். இருவரும் இணைந்து இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஜேக்ஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.வரும் 8ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.