கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடர் நாயகன் சஞ்சு சாம்சனை வரவேற்க தயாராகும் கேரள அரசு

சஞ்சு சாம்சனை வரவேற்க சிறப்பு நிகழ்ச்சிக்கு கேரள அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

திருவனந்தபுரம்,

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அளித்தார். அவர் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 80.25 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். 199 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த சஞ்சு சாம்சனை வரவேற்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான சஞ்சு சாம்சனுக்கு கேரள அரசு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கும் அம்மாநில பொதுக் கல்வி மற்றும் தொழிலாளர் துறை மந்திரி வி. சிவன்குட்டி இன்று தெரிவித்தார். மாநில தலைநகரில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். எனினும், வரவேற்பு தேதி குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.