ஜகார்தா,
இந்தேனேசிய ஓபன் சூப்பர்சீரீஸ் பிரிமியர் பேட்மின்டன் போட்டிகள் ஜகார்தாவில் நடைபெற்று வருகின்றன.இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பிரனாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.சாய் பிரனித் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமார் 56 நிமிடம் நடந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-15, 17-21, 21-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹாங்காங்கின் வேங் விங் கி வின்சென்டை வீழ்த்தினார். இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் இந்தோனேசியாவின் அண்டனி சினிஷுகா ஜினிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் பிரனாய் 21-13,21-18 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் சாய் பிரனித்தும் தென் கொரியாவின் வான்-ஹோவும் மோதினர். இதில் 21-14,21-18 என்ற செட்களில் வான்-ஹோ வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராஜ் ஷெட்டி ஜோடியும் இந்தோனேசியாவின் பஜர் அல்பியன் மற்றும் முகமது ரியான் அர்டிஅன்டோ ஜோடியும் மோதின.இப்போட்டியில் இந்தோனேசிய ஜோடி 9-21,19-21 என்ற செட்களில் எளிதாக வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி இந்தோனேசியாவின் தியான் பிட்ரினி மற்றும் நாட்யா மெலாத்தி ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த போட்டியில், 21-19, 19-21, 13-21 என்ற செட்களில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.