ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடரின் தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, பின்னர் டெல்லி மற்றும் லக்னோ அணிகளை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய அந்த அணி முனைப்பு காட்டும்.
நடப்பு தொடரில் இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாத ஒரே அணி கொல்கத்தா மட்டுமே. விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்விகள் மற்றும் ஒரு போட்டி மழையால் ரத்து (பஞ்சாப் அணிக்கு எதிராக) என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதுவரை இவ்விரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. அதில் குஜராத் 3 முறையும், கொல்கத்தா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கொல்கத்தா தனது முதல் வெற்றியைப் பெறுமா அல்லது குஜராத் தனது வெற்றிப்பயணத்தைத் தொடருமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.