கொல்கத்தா,
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. ஏற்கனவே தொடரை வசப்படுத்திவிட்டதால் இந்திய அணியில் லோகேஷ் ராகுல், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதிக்கு பதிலாக பெர்குசன் இடம் பிடித்தார். கேப்டன் பொறுப்பை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் கவனித்தார்.
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பிற்பகுதியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றாலும் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அவரும், இஷான் கிஷனும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இருவரும் அதிரடியாக மட்டையை சுழட்டினர். டிரென்ட் பவுல்ட், பெர்குசன் ஓவர்களில் ரோகித் சர்மா சிக்சர் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பவுண்டரிகளும் ஓடின. பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தியது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 200 ரன்களை தாண்டும் போல் தோன்றியது.
ஆனால் சுழற்பந்து வீச்சாளரும், பொறுப்பு கேப்டனுமான மிட்செல் சான்ட்னெர் வந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அவரது பந்து வீச்சில் இஷான் கிஷன் (29 ரன், 21 பந்து, 6 பவுண்டரி), அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (0) இருவரும் காலியானார்கள். அவரது இன்னொரு ஓவரில் ரிஷாப் பண்டும் (4 ரன்) அவசரகதியில் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடி தனது 26-வது அரைசதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா (56 ரன், 31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) சோதியின் சுழலில் அவரிடமே சிக்கினார். அப்போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 103 ரன்களுடன் (11.2 ஓவர்) நெருக்கடிக்குள்ளானது.
இந்த சூழலில் கைகோர்த்து ஓரளவு நிமிர வைத்த வெங்கடேஷ் அய்யரும் (20 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யரும் (25 ரன்) அடுத்தடுத்து வெளியேறியதால் சில ஓவர்களில் இந்தியாவின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. இதன் பின்னர் ஹர்ஷல் பட்டேலும், தீபக் சாஹரும் அணி சவாலான நிலையை எட்ட உதவினர். ஹர்ஷல் பட்டேல் (18 ரன், 11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை விளாச முயற்சித்த போது பேட்டு ஸ்டம்பு மீது பட்டு ஹிட் விக்கெட் ஆனார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட் முறையில் வீழ்ந்த 2-வது இந்தியர் ஹர்ஷல் ஆவார்.
இறுதி ஓவரை வீசிய ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் தீபக் சாஹர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் நொறுக்கியதுடன் 180 ரன்களை தாண்ட வைத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. தீபக் சாஹர் 21 ரன்களுடனும் (8 பந்து), அக்ஷர் பட்டேல் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, பெர்குசன், சோதி தலா ஒருவிக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 185 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில், தீபக் சாஹரின் ஓவரில் பவுண்டரி, சிக்சர் விளாசியதுடன் அதே ஓவரில் கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் நழுவ விட்டார்.
அதைத் தொடர்ந்து அக்ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முடக்கப்பட்டனர். அவரது பந்து வீச்சில் டேரில் மிட்செல் (5 ரன்), மார்க் சாப்மன் (0), கிளைன் பிலிப்ஸ் (0) ஆகியோர் வரிசையாக வெளியேற அதன் பிறகு நியூசிலாந்து அணியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் கப்தில் மட்டும் போராடினார். 16 ரன்னில் தப்பிய அவர் 51 ரன்களில் (36 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அத்துடன் நியூசிலாந்தின் நம்பிக்கை தகர்ந்தது. கடைசி கட்டத்தில் லோக்கி பெர்குசன் 2 சிக்சருடன் 14 ரன் எடுத்து மூன்று இலக்கத்தை கடக்க வைத்து ஆறுதல் அளித்தார்.
17.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 111 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், ஹர்ஷர் பட்டேல் 2 விக்கெட்டும் சாய்த்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக பந்து வீசிய வெங்கடேஷ் அய்யர் 3 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது.
அடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 25-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.