கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 300/5; வலுவான நிலையில் இந்தியா

கொழும்பு

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், 85 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 300 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா பேட்டிங்

இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (45), கே.எல். ராகுல் (18) ஆட்டமிழந்ததும், விளையாட வந்த தேவ்தத் படிக்கல் அரை சதம் விளாசினார். பின்னர் தொடர்ந்து விளையாடிய அவர், 168 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இந்த தொடரில் அவருடைய 2-வது சதம் இதுவாகும்.

ஆட்ட நேர இறுதியில்

கேப்டன் சுப்மான் கில்லும் அரை சதம் விளாசினார். அவர் 108 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்தபோது, நிரோஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 3 ரன்கள் எடுத்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும், படிக்கல்லும் தொடர்ந்து விளையாடினர்.

எனினும், படிக்கல் 12 பவுண்டரிகளுடன் 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தபோது, நுவந்தவின் பந்து வீச்சில் போல்டானார். ரவீந்திர ஜடேஜா 43 ரன்களில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், 85 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 300 ரன்கள் எடுத்துள்ளது.

துருவ் ஜுரெல் (7), சரண்ஷ் ஜெயின் (4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும், கேஷரா நுவந்த ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர். இதனால், இந்தியா முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் உள்ளது.