லின்கான்,
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹமிஷ் ரூதர்போர்டு, வில் யங் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்கோர் 67 ரன்னாக இருந்த போது ரூதர்போர்டு (40 ரன்கள்) முகமது சிராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சிகார் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரவீந்திரா 12 ரன்னிலும், வில் யங் 26 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 80 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 65 ரன்னிலும், டிம் செய்பெர்ட் 30 ரன்னிலும் ஆட்டம் இழந்தன்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து ஏ அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. டேன் கிளேவர் 46 ரன்னுடனும், டேரில் மிட்செல் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய ஏ அணி தரப்பில் முகமது சிராஜ், அவேஷ்கான் தலா 2 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 22 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.