கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேசத்தை ஊதித்தள்ளியது, இலங்கை

டாக்காவில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை ஊதித்தள்ளிய இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது. அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடக்கை பந்து வீச்சாளர் என்ற சிறப்பை இலங்கையின் ஹெராத் பெற்றார்.

தினத்தந்தி

டாக்கா,

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 222 ரன்களும், வங்காளதேசம் 110 ரன்களும் எடுத்தன. 112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 226 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ரோஷன் சில்வா 70 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதன் மூலம் வங்காளதேச அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்காளதேச வீரர்கள் இலங்கையின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 29.3 ஓவர்களில் 123 ரன்களில் முடங்கினர். அதிகபட்சமாக மொமினுல் ஹக் 33 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளும், ஹெராத் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அறிமுக டெஸ்டிலேயே ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய 3-வது இலங்கை பவுலர் என்ற சிறப்பை தனஞ்ஜெயா பெற்றார்.

39 வயதான ஹெராத் இதுவரை 415 விக்கெட்டுகள் (89 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகளுடன் (104 டெஸ்ட்) இந்த வகையில் சாதனையாளராக திகழ்ந்தார். ஒட்டுமொத்த அளவில் பார்த்தால் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் ஹெராத் 12-வது இடத்தில் உள்ளார்.

215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த இலங்கை வீரர் ரோஷன் சில்வா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு