கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: கேப்டவுனில் கோலோச்சுமா இந்தியா..?

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

தினத்தந்தி

கேப்டவுன்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். முதுகுவலியால் 2-வது டெஸ்டில் ஆடாத இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது கிடையாது. இந்தியா இங்கு 5 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் தோல்வியும் 2-ல் டிராவும் கண்டுள்ளது.

இதில் 2018-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் 208 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 135 ரன்னில் சுருண்டு தோற்றதும் அடங்கும். இதே போல் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 4 டெஸ்டுகளில் விளையாடி அனைத்திலும் தோற்று இருக்கிறது.

தென்ஆப்பிரிக்காவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் இந்தியா முதல்முறையாக அந்த அணியை தோற்கடித்து வரலாறு படைத்தது. இதே போல் கேப்டவுனிலும் இந்தியா முழுமையாக கோலோச்சி புதிய சரித்திரம் படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். கேப்டவுனில் இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர் (2 முறை), வாசிம் ஜாபர், முகமது அசாருதீன் ஆகியோர் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு