லண்டன்,
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான லின்சி ஸ்மித், சர்வதேச டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லின்சி ஸ்மித், பாகிஸ்தான் வீராங்கனை சாடியா இக்பாலை பின்னுக்குத் தள்ளி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
31 வயதான லின்சி ஸ்மித், 2018-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் நீண்டகாலம் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் சுமார் ஐந்து ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியே இருந்தார். எனினும், கடின உழைப்பு மற்றும் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளின் மூலம் 2024-ம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் இங்கிலாந்தின் டி20 அணியில் இடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் லின்சி ஸ்மித் சிறப்பாக செயல்பட்டு ‘தொடர் நாயகி’ விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து, பிரிஸ்டலில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த தொடர் வெற்றிகளும், தொடர்ந்து வெளிப்படுத்திய பந்துவீச்சுத் திறனும் அவரை தரவரிசையின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன.
வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக உயர்ந்திருப்பது லின்சி ஸ்மித்திற்கும், இங்கிலாந்து அணிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.