டாக்கா,
வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹ்முதுல்லா, 2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் நடந்த போட்டியை நினைவுகூர்ந்து சுவாரசியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் தோல்வியடைந்த பின் அணியின் அனைத்து வீரர்களும் டிரெஸ்ஸிங் ரூமில் கண்ணீர் விட்டதாக கூறினார்.
2016 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் கடைசி பந்துவரை சென்றது. வங்காளதேசத்திற்கு வெற்றிக்கு 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அந்த ஓவரை இந்தியா ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீசினார்.
அப்போது முஷ்பிகுர் ரஹீம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் தொடர் பவுண்டரிகளை அடித்தார். இதனால் வங்காளதேசம் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்ட்யா விடவில்லை. ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா விக்கெட்டுகளை எடுத்தார். இறுதி பந்தில் பங்களாதேஷுக்கு வெறும் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷுவாகதா அடிக்காமல் விட பந்து தோனியிடம் சென்றது. அப்போது இருவரும் ரன் ஓட, தோனி நான்ஸ்ட்ரைக்கர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரீஸுக்குல் வருவதற்கு முன்பே ஸ்டம்ப்பை அடித்து அவுட் செய்தார். இதனால் இந்தியா 1 ரனில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மஹ்முதுல்லா, அந்த போட்டியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுகூர்ந்துள்ளார். அந்த போட்டியில் தோல்வியடைந்த பின் அணியின் அனைத்து வீரர்களும் டிரெஸ்ஸிங் ரூமில் கண்ணீர் விட்டதாக கூறினார். அதை மிகவேதனையான தோல்வி எனவும் கூறினார்.