6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ஒரு நாள் போட்டிக்கான மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் விளையாடவில்லை.
அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும், முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
இதுபற்றி மிதாலி ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நிர்வாக குழு உறுப்பினர் டையானா எடுல்ஜி தனது பதவியை எனக்கு எதிராக பயன்படுத்தி விட்டார் என கூறினார். இதேபோன்று பயிற்சியாளர் ரமேஷ் பொவாரையும் அவர் கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், பி.சி.சி.ஐ. தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்கு பொவார் எழுதியுள்ள கடிதத்தில், மிரட்டுவது, பயிற்சியாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவது மற்றும் அணியை விட தன் விருப்பத்தினை முன் வைப்பது போன்றவற்றை மிதாலி நிறுத்தி கொள்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பயிற்சி ஆட்டங்களில் வேகமுடன் ரன் குவிக்க மிதாலி ஆர்வம் காட்டவில்லை. அதனால் தானியா பாட்டியாவை (நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில்) தொடக்க ஆட்டக்காரராக இறக்கினோம். அவர் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும்பொழுதும் ஆர்வத்தினை வெளிப்படுத்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தானியா மற்றும் ஹேமலதாவை பயன்படுத்தினோம். அவர்கள் பவர்பிளேயில் 13 பந்துகளில் 24 ரன்களை குவித்தனர். தனிநபர் சாதனைகள் எப்பொழுதும் தேவையானது அல்ல. குழு நடவடிக்கைகளே எப்பொழுதும் அவசியம்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீராங்கனையாக வாய்ப்பு தரவில்லை எனில் நாட்டுக்கு திரும்பிவிடுவேன் என அச்சுறுத்தும் தன்மை கொண்டவராக மிதாலி இருக்கிறார் என்று பொவார் தெரிவித்துள்ளார்.