சென்னை,
இந்திய அணி வரும் நவம்பர் மாதம் நவம்பர் 27ம் தேதி முதல் 2021 ஜனவரி 19-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த மாதம் 26-ம் தேதி பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால், அந்த அணியில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதையடுத்து, அணி திருத்தப்பட்டு புதிய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான வருண் சக்ரவர்த்தி, டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் சேலம் நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நடராஜனைத் தொடர்புகொண்டு பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் மேலும் பல உயர்வுகளைப் பெறவும், வெற்றிகளைக் குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்குப் பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்.
நடராஜனின் அனைத்துக் கனவுகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.