கிரிக்கெட்

நகைகளை விற்று கிரிக்கெட் கிட்: தாயின் தியாகத்தால் உலகக் கோப்பையை அடைந்த இந்திய வீராங்கனை

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வீராங்கனை கிராந்தி கவுட்.

புது டெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட், தனது ஆரம்பகால போராட்டங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

முத்தரப்பு தொடரில் அறிமுகம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான கிராந்தி கவுட், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி, 52 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

சிறிய கிராமத்தில் இருந்து

இந்நிலையில், தனது கிரிக்கெட் பயணம் குறித்து பேசிய கிராந்தி கவுட், “இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே அனுமதி இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவள் நான்.

பெண்கள் வெளியே சென்றாலே விமர்சனங்கள் எழும் சூழல் அங்கு நிலவியது. ஆனால், ‘முயற்சி செய்பவர்கள் தோற்பதில்லை’ என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். இன்று உலகக்கோப்பை மேடையில் இந்திய ஜெர்சியை அணிந்து நிற்பது, என் அத்தனை போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

தாயின் தியாகம்

மேலும் அவர் கூறுகையில், “வெளி உலகம் என்ன சொன்னாலும் குடும்பம் நமக்கு ஆதரவாக இருந்தால் எதையும் எதிர்கொள்ள முடியும். என் பெற்றோர் என் கனவை நம்பினர். ஆரம்பத்தில் எங்களிடம் போதிய வசதிகள் இல்லை.

எனக்கு ஒரு நல்ல கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக என் அம்மா தனது நகைகளை விற்றார். குடும்பம் எனக்காக இவ்வளவு செய்தபோது, அவர்களின் தியாகத்தை வீணாக்காமல் சாதிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்குள் உருவானது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.