கிரிக்கெட்

20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை... உருக்கமான பதிவுடன் ஓய்வு பெற்ற சோபி டிவைன்

தனது ஓய்வு குறித்து சோபி டிவைன், இன்ஸ்டாகிராமில் சக வீராங்கனைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை,

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான சோபி டிவைன் தனது 20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

தனது ஓய்வு குறித்து சோபி டிவைன், இன்ஸ்டாகிராமில் சக வீராங்கனைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், "கடந்த 20 ஆண்டுகள் எப்படி கடந்து போனது என்றே தெரியவில்லை. எனது இரு சிறந்த நண்பர்களான சுசி பேட்ஸ் மற்றும் லியா தஹுஹுவுடன் விடைபெறுவது, என் சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு மிக சிறந்த விடைபெறலாக அமைந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி

தனது நீண்டகால கிரிக்கெட் பயணத்தில் துணையாக இருந்த பயிற்சியாளர்கள், பிசியோக்கள், உடற்தகுதி பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் சோபி டிவைன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், "உலக அரங்கில் நமது அழகான நியூசிலாந்து நாட்டிற்காக உங்களுடன் இணைந்து விளையாடியதை விட எனக்கு பெருமை தரும் விஷயம் எதுவுமில்லை. நான் இவ்வளவு காலம் விளையாடியதற்கான முக்கிய காரணம் நீங்கள்தான்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிகளிலும் தோல்விகளிலும் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த அவர், தனது கடைசி சர்வதேச போட்டியை அவர்கள் நேரில் கண்டது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்றும் கூறியுள்ளார்.

சாதனை மிக்க கிரிக்கெட் பயணம்

கடந்த 20 ஆண்டுகளாக நியூசிலாந்து மகளிர் அணியின் முக்கிய தூணாக விளங்கிய சோபி டிவைன், உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.