கொல்கத்தா,
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் இல்லாததே முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
227 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, பவர் பிளேயில் 74 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் பெற்றது. ஆனால் அதன் பின்னர் மிடில் ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.
போட்டிக்கு பின் ரஹானே பேசுகையில், “நாங்கள் முதல் 6 ஓவர்களில் 78 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் அந்த நேரத்தில் கேமரூன் க்ரீன் ரன் அவுட் ஆனது எங்களுக்கு பின்னடைவை தந்தது. நிலைத்து நின்று ஆடிய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியமானது, ஆனால் அது எங்களுக்கு அமையவில்லை’ என்றார்.
மேலும், ’முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சற்று வித்தியாசமாக செயல்பட்டது. பந்து பேட்டிற்கு வருவதற்கு சற்று தாமதமானது. போகப் போக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என நினைத்தோம். ஆனால் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் இந்த நிலைமையை உணர்ந்து ஸ்லோவர் பந்துகளை அருமையாக பயன்படுத்தினர். இருப்பினும் இதை நாங்கள் தோல்விக்கான ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை’ என்றார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. பின்னர் 227 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.