பீகார்,
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி ஏற்படுத்தி வரும் தாக்கம், வெறும் கிரிக்கெட் சாதனைகளைத் தாண்டி புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. பீகாரைச் சேர்ந்த இந்த 15 வயது பேட்ஸ்மேனின் அபார ஆட்டத்தால், அந்த மாநிலத்திற்கும் ஒரு தனி ஐபிஎல் அணி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்த சீசனில் தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வெறும் 13 இன்னிங்ஸ்களில் 53 சிக்ஸர்களை விளாசி, ஐபிஎல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வைபவின் ஆட்டத்தை பாராட்டிய நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர், பீகார் மாநிலத்திற்கும் ஐபிஎல் அணி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டுக்கு திறமையான வீரர்களை தொடர்ந்து வழங்கி வரும் பீகாருக்கு இன்னும் ஐபிஎல் அணி இல்லாதது குறித்து ரசிகர்கள் நீண்ட காலமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷியின் எழுச்சிக்குப் பிறகு அந்த கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.
தற்போது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் அணிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அப்படி புதிய அணிகள் சேர்க்கப்படும் சூழல் உருவானால், பீகார் மாநிலத்திற்கு தனி பிரான்சைஸ் வழங்கப்பட வேண்டுமென ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் இந்த விவாதத்திற்கு புதிய உயிர் ஊட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.