மும்பை,
ஐபிஎல் 2026 தொடரில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயத்தால் விலகிய நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னருக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பவுண்டரி எல்லை அருகே கேட்ச் பிடிக்க முயன்றபோது மிட்செல் சான்ட்னரின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு அவர் இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாது எனத் தெரியவந்ததை அடுத்து அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேசவ் மகாராஜை அவரது அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடினார். ஏற்கனவே 2024 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு.
தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னேற போராடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, மகாராஜின் வருகை சுழற்பந்து வீச்சு பிரிவில் கூடுதல் பலத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.